Saturday, May 7, 2011

காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல மிகப்பெரிய உண்மை- பகுதி-2

வெறும் நம்பிக்கைகளை நம்பினால் நம்புங்கள் என்றபாணியில் சொல்லிவிட்டுப் போய்விடலாம். உண்மைகளை, உணர்வதற்கான பாதையை மட்டுமே காட்டலாம். இனிவரும் கருத்துக்களைப் படிக்க முற்படுபவர்கள், இந்த தொகுப்பின் முதல் பகுதியைப் படித்துவிட்டுத் தொடருங்கள்.முதல் பகுதிக்குப் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்குவித்த வலைப்பதிவு நண்பர்களுக்கு நன்றி.

முதல் வரியைக் குறிப்பிடவில்லையே ஏன்? இந்த மந்திரத்தை அறிந்தவர்களாக இருந்தால் இந்தக் கேள்வி மனதில் எழும்.

சூரிய ஒளியில் நின்றுகொண்டு " நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும் அருள்மிகு சவிதூரிலிருந்து கிடக்கப்பெறும் ஒளியைத் தியானிக்கிறோம்" என்று சொல்லிக்கொள்வதே மந்திரம்.

தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
தியோ யோந: பிரச்சோதயாத்

இதைச் சொல்லி முடிப்பதற்கு 10 வினாடிகளே போதுமானது.ஆனால் அலைபாயும் மனதை தியான நிலைக்குக் கொண்டுவர 10 வினாடிகள் போதுமா?

படைக்கப்பட்ட எல்லாமுமே நகர்ந்து கொண்டிருந்தால் நகர்ந்து கொண்டே இருக்கும், கிடந்தவண்ணம் இருந்தால் கிடந்தே இருக்கும். அவற்றின் மேல் ஏதேனும் விசைகள் செயல்ப்ட்டால் இந்தநிலைகள் மெதுவாகவே மாறும். அதுபோலவே எப்போதும் இயக்கத்தில் இருக்கும் மனதைச் சட்டென்று தியான நிலைக்குக் கொண்டுவரமுடியாது.

சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களின் முன் இருந்தால், குறைந்தது 100 விநாடிகளில் மன ஓட்டத்தைத் திசைத் திருப்ப முடியும்.

இந்த அடிப்படையில் திரும்பத் திரும்ப மந்திரத்தை சங்கல்பம் செய்தால் 100 வினாடிகளில் 10 முறை மந்திரம் ஜெபிக்க முடியும்.

மனதை ஒரு பொருளின் மீது நிறுத்த முயற்சி செய்து பாருங்கள். எகிறி ஓடத்தான் பார்க்கும். தியான முறைகளில் ஒரு பொருளின் மீது மனதை நிறுத்துவதைவிடச் சிறந்த முறை இருக்கிறதா?

காயத்ரியில் ஒளியைத் தியானிக்க வேண்டும். அப்படியென்றால் இதுவும் மனதை நிறுத்த முயற்சி செய்வது போலாகிவிடுமல்லவா?

ஒளியைத் தியானிப்பதனையும் கடந்து ஏதாவது சிறப்பு காயத்ரியில் இருக்கிறதா?

சங்கல்பம் செய்வதில் நம் புத்தியைப் பற்றியும் இருக்கிறதே.

மனது, புத்திக்கும் ஒளிக்கும் இடையே ஒரு நேர்கோட்டுப் பதையை தியானிக்க முற்படும். சங்கல்பத்தில் தன் நிலை உணர்வையும் சேர்த்துக் கொண்டால், நேர்கோட்டுப்பாதை முக்கோணப் பாதையாக உருமாருவதை உணரலாம்.

முக்கோணப்பாதை மனதை சுழற்சிக்கு வழிசெய்யும். இயக்கத்தில் சுழற்சி என்று ஆகிவிட்டாலே சுழற்சி மையம் ஒன்று அமைந்துவிடும். இந்த மையத்தைச் சுற்றி மனம் எளிதாக சுழன்று தியானம் சுலபமாய் கைகூடும்.

தன் நிலை உணர்வைக் குறிக்க
ஓம் பூர் புவ: சுவ:
(OM BHUR BHUVAHA SUVAHA)
என்று மனதின் நான்கு நிலைகளையும் உள்ளடக்கிய சொற்றொடர் காயத்ரியின் முன்னால் இணைக்கப்படுகிறது.

ஓம்- சிந்தனையற்ற விழிப்பு நிலை.
பூர் - நிகழ்காலத்தில் செயலாற்றலில் ஈடுபட்ட நிலை
புவஹ- கனவும்,கற்பனையும் ஆகிய நிலை
சுவஹ- உறக்கநிலை.

ஓம் பூர் புவ: சுவ: என்ற சொற்றொடர் இறைவழிபாட்டிற்கு சொல்லப் படும் மந்திரங்கள் அத்தனையிலும் முதல் வரியாகி நிற்கிறது.

ஓம் பூர் புவ: சுவ: சேர்த்து ஒரு முறை காயத்ரி ஜபம் செய்ய 14 வினாடிகள் ஆகும். 10 முறை ஜபம் செய்ய 140 வினாடிகள் அதாவது நிமிடமே தேவைப்படும். இந்தக் குறைந்த பட்ச அளவே போதுமானது. இந்த அனுபவம் சுகமாகப் பட்டால் 28 முறை சொல்ல நிமிடம் அதாவது ¼ நாழிகைக்கு கணக்கு வரும். மனம் முழுவதுமாக அமைதியடைந்து அமைதியுணர்வு நெடுநேரம் நீடிக்க 1 நாழிகை நேரம் தியானம் தேவைப்படுவதை அனுபவத்தில் உணர்ந்ததால், 108 முறை காயத்ரி சங்கல்பம் செய்வது பரிந்துரைக்கப் படுகிறது போலும்.

108 முறை செய்வதற்கு அதிகாலை நேரமோ, அந்திமாலையோதான் உகந்த நேரம். இந்த அளவு உலக விஷயங்களில் பற்றற்ற நிலையைக் கொடுக்கக் கூடும்.

சாதரணமாக 10 முறை சங்கல்பம் என்பது தினசரி பயிற்சிக்குப் போதுமானது.நின்றுகொண்டே கூடச்சொல்லி முடித்துவிடலாம்.

சமஸ்கிருத ஒலிச் சேர்க்கையால் 24 எழுதுக்களில் அமைந்த காயத்ரி மந்திரத்தின் ஒலியின் அதிர்வுகள், நம்முடைய சுவாசமண்டலத்தை பரிசுத்தமாக்குவதை உணரமுடிகிறது. தொண்டையில் சளியோ, இருமலோ இருக்கும் காலங்களிலும், ஜலதோஷம் பிடித்துள்ள நாட்களிலும், எழாவது - எட்டாவது முறை மந்திரம் சொல்லும் பொழுதே தொண்டை அடைத்துக்கொள்வதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஜபம் முடிந்தவுடன், குரல் மிகத்தெளிவாக மாறி இருப்பதையும், சுவாசம் நன்றாக இருப்பதையும் உணர முடிகிறது.

காயத்ரியின் உண்மையை உணர்ந்து கொள்ள இந்த இரட்டைப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

காயத்ரி மந்திரம் பற்றிய அருமையான விளக்கங்கள்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். அன்புடன் vgk

Yaathoramani.blogspot.com said...

விஷயங்களை அணுகும்போது
தராசு போல எப்பக்கமும் சாயாது
அணுகுவதென்பது சான்றோர்க்கு
அழகென வள்ளுவன் கூறுவான்
இந்த காயத்ரி மந்திர விளக்கங்களில்
தங்கள் அணுகுமுறையில் அதைக் காண முடிகிறது
நல்ல தெளிவூட்டும் பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

Very Good posts on Gayathri sir...
- Madhan

எல் கே said...

விளக்கத்திற்கு நன்றி. மேலும் ஒன்று சேர்த்து விடுங்கள். சில மந்திரங்கள் குரு உபதேசத்திற்கு பிறகே சொல்லவேண்டும். காயத்ரி மந்திரம் அப்படிப்பட்ட ஒன்று

Post a Comment