Saturday, April 9, 2011

ஆரோக்கியத்தின் கடவுள்கள்




நம்மில் பெரும் பாலோருக்கு கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருக்கிறது.. இறை நம்பிக்கை நமக்கு ஒரு சுகமான உணர்வைக் கொடுக்கிறது. மனதிடத்தையும் கூட்டுகிறது.. நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். நமது பிரச்சனைகளைக் கடவுள் கேட்பார் என நம்புகிறோம். பல சமயங்களில் நம் பிரச்சனை தீர்ந்து விடும். மாறாக தவறுதலாக நடந்தால் அதை நம் விதி என ஏற்றுக் கொள்கிறோம்..

இதே மாதிரியான நம்பிக்கையைத் தான் நாம் மருத்துவர்கள் மீதும் ஏற்படுத்திக் கொள்கிறோம். உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்கிறோம், அவர் வார்ததைகளுக்கு அடி பணிந்து அவர் கொடுக்கும் மருந்துகளை விழுங்குகிறோம்.. நான் என் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும், அவர்கள் உட்கொள்ளும் மருந்து பற்றி விசாரித்திருக்கிறேன். நன்றாகப் படித்தவர்களுக்குக் கூட சாதாரணமான காய்ச்சலு்க்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பெயர் கூட அறியாதவர்களாய் இருக்கிறார்கள். மக்கள் மருத்துவர்கள் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நம்பிகையால் மருத்துவர்கள் மக்கள் உடல் நலம் காப்பதில் தாங்கள் அசாதாரண சக்தி படைத்த மனிதர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.

நான் வசிக்கும் இடத்தில் உள்ள மருத்துவர்கள் தங்களைப் பார்க்க வரும் நோயாளிகளை பல மணி நேரம் மற்ற நோயாளிகளோடு நோய் நொடியுள்ள சூழலில் காத்திருக்க செய்கின்றனர். நண்பர்களும் இதற்கு விதி விலக்கல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவர் பிரசித்தி பெற்றிருக்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு காத்திருக்கும் நேரமும் கூடுகிறது. நான்கு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த கசப்பான அனுபவம் எனக்கு இருக்கிறது.

நாம் மருத்துவரின் அறையில் நுழையும் போது பல சமயயங்களில், வித்தியாசமான உடையணிந்த ஒரு நபரைப் பார்க்கலாம். அவர் தான் Medical Representative. மருத்துவர் எதிரில் அமர்ந்து கொண்டு அவர், கலர் கலரான புத்தகத்தை காண்பித்து மருத்துவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் மருத்துவரோ இந்தக் கூத்தை எல்லாம் காது கொடுத்து கேட்பது போலவே இருக்காது.தனக்கு என்ன சாம்பிள் மருந்துகள் கிடைககும் என்பதிலேயே குறியாக இருப்பார். அந்த மருத்துவ பிரதிநிதியோ எப்படியாவது மருத்துவரை தன்னுடைய கம்பெனி மருந்துகளை எழுத வைத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருப்பவர். அந்த மருந்துகளை சாப்பிடும் நோயாளிகளோ அவை தமக்கு தேவை இல்லை என்றாலும் கூட அதிகளவில் செலவழித்து அந்த மருந்துகளை வாங்குகின்ற நி்ர்பந்தத்திற்கு தள்ளப்படுபவர்கள்.

இந்த மாதரியான வேடிக்கைக்குப் பிறகு மருத்துவர் நம்மை ஏதோ ஒருவிதமான வியக்கத்தக்க வகையில் பார்த்து சில கேள்விகளைக் கேட்பார். பிறகு அவருடைய மருந்து சீட்டில் ஏதோ மருந்துகளை எழுதுவார். அது மருந்துக் கடையில் வேலை பார்ப்ப்வருக்கு மட்டுமே புரியும். மருத்துவரும் நமக்குக் கொடுக்கின்ற மருந்து பற்றிய விவரம் ஏதும் சொல்வதில்லை. நாமும் ஏன் இவ்வளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வதே இல்லை. மருந்துகள் மீது அவ்வளவு நம்பிக்கை நமக்கு.மருந்துகள் நம்மை குணமடையச் செய்யும் என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலை.

மருத்துவர்கள் வெகு சில நேரங்களில் தான் நோயை குணப்படுத்துவார்கள். பல சமயங்ககளில் நோயின் தாக்கத்தை குறைப்பார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் ஆறுதல் அளிப்பார்கள் என்று கி.மு.1ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்போகிரேட்டஸ் என்ற மருத்துவ மேதை எழுதியிருக்கிறார். இப்பொழுதெல்லாம் மருததுவர்கள் நோயாளிக்கு ஆறதல் அளிப்பதைத் தவிர்த்து, அவரைக் குழப்பமடையச் செய்கிறார்கள். இதை எல்லாம் நாம் சரியாக புரிந்து கொண்டால் நம் ஆரோக்கியதை நாமே தக்க வைத்துக் கொள்ளலாம்.


நம் உடல் ஆரோக்கியம் மருத்துவர் கையில் இல்லை. நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.. நம் வாழ்க்கை முறை, உணவு, சிந்தனை ஓட்டம், சுற்றுச் சூழல், பழக்க வழக்கங்கள், மற்றும் தாம்பத்ய வாழ்க்கை. இவை எல்லாம் தான் நம்முடைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் மாறுதல் என்றால் நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே நம் உடல் உறுப்புகளைப் பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். வலி நிவாரணி என்றால் என்ன என்றும் ஆண்ட்டிபயாடிக் என்றால் என்ன என்றும் புரிந்து கொள்ள வேண்டும். எதைச் சாப்பிட்டாலும் உடலுக்குள் ஏதோ ஒரு வினையும் எதிர்வினையும் நிகழும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் நோயாளிகளின் அறிகுறிகளைப் பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதில்லை. ரேடியோலஜி மற்றும் லேபரட்டரிகளின் முன்னேற்றங்களால் பெரும்பாலான நோயாளிகள் scan, ECG, Blood test, Urine test மற்றும் உடல் சம்பந்தப்பட்ட இதர சில பரிசோதனைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.. முடிவில் எந்தச் சோதனையிலும் பிரச்சனை இல்லை, எல்லாம் சரியாக இருக்கிறது என்ற ரிப்போர்ட் கொடுக்கப்படும். ஆனால் முதலில் உள்ள அடறிகுறிகள் இருந்து கொண்டே இருக்கு்ம்.

நோயானது இயற்கையாக தானாக குணமாகி இருக்கும். ஆனால் பெருமையோ மருத்துவரைப் போய்ச் சேர்கிறது. பல விதமான மருத்துவப் பிரிவுகள் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகளில் நடக்கும் சுரண்டலுக்கு அளவே இல்லை. அங்கு பல நோய்களுக்கும் தீர்வு அறுவை சிகிச்சை தான். சாதாரணமான ஜலதோஷத்திற்கும் நிரந்தர தீர்வாக என்ன அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இதய நோய்ப்பிரிவு லட்சங்களைச் சுருட்டும் ஒரு வேக விளையாட்டு. பல தேவையற்ற சிகிச்சை முறைகள் செய்யப் படுகின்றன. மகப்பேறு ம்ருத்துவமும் இது போல் தான் இருக்கிறது. காலப் போக்கில் கால்நடை விலங்குகள் மற்றும் செல்லப் பிராணியான நாய்களுக்கும் சுகப்பிரசவம் என்பது இல்லாமலே போய் விடும் போல் இருக்கிறது.

நாம் ஏன் இந்த மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும்? ஒழுங்கான வாழ்க்கை முறை, நிதானமான மன நிலை, உணர்ச்சிகளை சமன் படுத்திக் கொள்ளுதல் இவை எல்லாம் இருந்தாலே நம் ஆரோக்கியத்தை நாமே தக்க வைத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை திறன்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பற்றிய பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொண்டு ஆரோக்கியக் கடவுளிடம் அடிக்கடி சென்று மாட்டிக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

நித்தம் ஒரு மென்திறன் பாடம், மருத்துவரை தூரத்தே நிறுத்தும்.

நாமே நம் ஆரோக்கியத்திற்குக் கடவுள்களாகலாம்.


***********************************************

No comments:

Post a Comment